டார்ச் லைட் கொடுத்து உதவிய பெண்ணையே காவலர் இருட்டில் …….. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை.
திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது .
அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார். அதனை நிகழ்விடம் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் காவலர் சுல்தான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் இருட்டில் சோதனை செய்து கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எதற்காக வீடுகள் உள்ள பகுதியில் சோதனை செய்கிறீர்கள் என்று விவரம் கேட்டறிந்தார். அதன்பின் போலீசாருக்கு உதவும் வகையில், வீட்டில் இருந்த ஒரு டார்ச்லைட்டை எடுத்து அதைக் காவலர் சுல்தானிடம் கொடுத்து உதவுமாறு தனது மகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணும் டார்ச்லைட்டை காவலர் சுல்தானிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், காவலர் சுல்தான், டார்ச்லைட்டை வாங்கிய போது அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நடந்தவற்றைத் தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகத்தில் பெண்ணின் தந்தை புகார் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில் காவல் ஆணையர் ந.கமினி முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து காவலர் சுல்தானை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.