தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடக்ககல்வி பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 7 முதல் 17 வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக, ஏப்ரல் 9 முதல் 21 வரை இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தீவிரம் காரணமாக தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள்:

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 7ஆம் தேதி திங்கள் கிழமை அன்று தமிழ் தேர்வும், ஏப்ரல் 8ஆம் தேதி விருப்ப மொழித் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி அன்று ஆங்கிலம், ஏப்ரல் 11ஆம் தேதி அன்று கணக்கு, ஏப்ரல் 15ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 17ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், “பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு!1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவச் செல்வங்களை காப்போம்!” என பதிவிட்டு உள்ளார்.