திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் ‘போக்ஸோ’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் நேற்று திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சோ்ந்த புரக்கிலா கவுண்டா் மகன் சேகா் ( வயது 48). பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கடந்த 21.05.2020 அன்று மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வர இருப்பதால் தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்ற பயத்தில் நேற்று திங்கள்கிழமை தனது வீட்டிலிருந்து சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சேகா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.