திருச்சியில் தாயார் இறந்த விரக்தியில்
கல்லூரி மாணவர் தற்கொலை.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சியில் தாயார் உயிரிழப்பு, மற்றும் தனிமையால் ஏற்பட்ட விரக்தி காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி, திருவானைக்காவல், திருவளர்சோலை கீழத்தெருவைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். லாரி ஓட்டுநரான அவரது மனைவி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த சோகத்திலிருந்து விடுபடும் வகையில் தற்போது, அல்லித்துறை பகுதியில் சரவணபுரம் பகுதியில் குழந்தைகளுடன் குடிபெயர்ந்து வசித்து வருகிறார்.
இவரது மகன் ஜெய்கிருஷ்ணன் (வயது 20) சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கடந்த 6 மாதமாக அவர் கல்லூரி செல்ல வில்லையாம். அவரது அக்கா பிரியதர்ஷின் (வயது 22) கோவையில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். அன்புச்செழியன் லாரி ஓட்டுநராக அடிக்கடி வடமாநிலங்களுக்கு பணிக்குச் சென்று விடுவதால் வீட்டில் ஜெய்கிருஷ்ணன் மட்டும் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
தாயார் இறந்த சோகம், தனிமையில் இருந்த அவரை விரக்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக அவரது அக்காவிடம் அடிக்கடி கைப்பேசியில் பேசி புலம்பி வந்துள்ளார். அவரும் அடுத்தாண்டு படிப்பு முடிந்து வந்து விடுவதாக தம்பிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அவரது கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்து அவரது நண்பரை சென்று பார்க்கச்சொல்லியுள்ளார். நண்பர் அன்று நள்ளிரவு வீட்டில் சென்று பார்த்தபோது ஜெய்கிருஷ்ணன் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

