திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது.
வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பெருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வயலூர் கோயிலில், ஆதிநாதர் சிவன் சன்னதி, ஆதிநாயகி அம்மன் சன்னதி, பொய்யா கணபதி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் உடனுறையும் சுப்பிரமணிய சுவாமி சன்னதி, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு, திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வயலூர் முருகன் கோயிலில் கடைசியாக, 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து 17 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு, சுமார் 30 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த 14-ம் தேதி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோபூஜை ஆகிய பூஜைகளுடன் யாகச்சாலை பூஜைகள் தொடங்கியது.
யாகச்சாலை பூஜைகள், தமிழகத்தின் மிக சிறந்த ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பன்னிரு திருமுறைகள் மற்றும் திருப்புகழ் பாராயணம், நாதஸ்வர மங்கல இசையுடன் நடைபெற்றது.
தொடர்ந்து ஆறுகால யாகச்சாலைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை யாகச்சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள், வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டன. புனித குடங்களை சுமந்துச் சென்ற சிவாச்சாரியார்கள், இன்று (19-ம் தேதி புதன்கிழமை) காலை 9.30 மணியளவில், ராஜகோபுரம், சகல விமானங்கள் புனித நீரை ஊற்றி, ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது, கோயில் முன்பு திரண்டிருந்த
லட்சக்கணக்கான பக்தர்களின் “அரோகரா.. அரோகரா..” கோஷத்தால் வயலூர் கிராமமே அதிர்ந்தது. திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார் தலைமையில், எஸ்பி செல்வ நாகரத்தினம் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோயில் உதவி ஆணையர் அருள்பாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.