கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொந்தரவு.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர்.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக் கேட்டிருக்கிறோம். அந்த கொடூரங்கள் எல்லாம், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாலோ, அக்கம்பக்கத்தாராலோ அல்லது நண்பர்களாலோ நிகழ்த்தப்பட்டிருக்கும்.
ஆனால் கடந்த 4 நாட்களாகக் காதில் விழும் செய்தி அப்படியில்லை. வேலியே பயிரை மேய்வதுபோல, வகுப்புகளிலும் பள்ளி வளாகங்களிலும், கல்லூரிகளிலும் பட்டப்பகலிலேயே ஆசிரியர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு வகுப்பு பேராசிரியராக குமார் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்ற சம்பவங்கள்:-

சம்பவம் 1: கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், 8ஆம் வகுப்பு மாணவி ஜனவரி 3ஆம் தேதி அன்று அங்கு பணியாற்றிய சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் என்னும் காமக் கொடூரன்களால் அங்கிருந்த கழிப்பறையில் வைத்து வேட்டையாடப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றம் செய்த மூவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, புதிதாக பணியிட மாற்றம் செய்த 4 பெண் ஆசிரியர்கள் பணியில் இணைந்தனர். ஆனாலும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயாராய் இல்லை.
சம்பவம் 2: சேலம்
கிருஷ்ணகிரி, சேலம், சேலம், ஓமலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் அளித்த புகாரை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 3: மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரும் சரண் அடைந்துள்ளார்.
சிவகங்கை, திருச்சி விழுப்புரம் என குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.