திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே ரகு என்பவர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றும் கூறியதுடன், பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர் ஆக்குகிறேன் என்றும் கூறி ஒரு யூடியூப் சேனலில் மாந்திரீகம் சம்பந்தமான நிறைய வீடியோக்களை காண்பித்து திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஸ் பாபு என்பவரை ஏமாற்றியதாக கைது செய்தனர்.
மாந்திரீகம் என்ற பெயரில் போலியாக சிலர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது அடிக்கடி நடக்கிறது. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் அல்லது முதியவர்களை கண்காணித்து வரும் சிலர், ஜோதிடம் பார்க்கலாம் என்று கூறியும், சிலர் தோஷம் கழித்தால் எல்லாம் சரியாகும் என்று கூறியும் நம்ப வைக்கிறார்கள். அப்படி நம்பும் பெண்கள் அல்லது முதியவர்களிடம் வீட்டில் பூஜை செய்தால் எல்லா பிரச்சனையும் சரியாகும் என்று கூறுகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பி பூஜைக்கு ஒப்புக்கொள்பவர்களிடம் தங்க நகைகளை வாங்கி பாத்திரத்தில் போட்டு சாம்பிராணி சூடம் காட்டி பூஜை செய்து பின்னர் தருகிறார்கள். அதில் தங்க நகை எதுவும் இருக்காது. தங்கநகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். இன்னொரு குரூப் இருப்பார்கள்.. உன்னை நினைத்து படத்தில் வருவது போல், பொய் பொய்யப்பன் என்பதற்கு சவால் விடும் வகையில் இருப்பார்கள். சர்க்கரையாக பேசுவார்கள்..
அருமையான ஜாதகம் என்றும், உங்களை கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்றும் கூறி நம்ப வைத்து பணத்தை பறிப்பார்கள். மாந்திரீகம் செய்வதாகவும் சிலர் பணம் பறிப்பதாகவும். இப்படி மாந்தரீகம், ஜோதிடம், தோஷம் கழிக்கலாம் என்ற பெயரில் போலி சாமியார்கள், குறி சொல்வதாக சுற்றி ஏமாற்றுபவர்கள் தங்க நகை, பணம் ஆகியவற்றை திருடி செல்வது அடிக்கடி நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் இன்று திருச்சியில் நடைபெற்று உள்ளது .
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஸ்பாபு (வயது 31) என்பவரிடம் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ரகு (வயது 45) என்பவர் தனது சொந்த மாநிலம் கேரளா என்றும், ஜோதிடம் மற்றும் மாந்திரீகம், பூஜை செய்வதில் கைதேர்ந்தவர் என்றும் கூறினாராம். மேலும் உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்று கூறியதுடன், வரும் பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர் ஆக்குகிறேன் என்றும் கூறி ஒரு யூடியூப் சேனலில் மாந்திரீகம் சம்பந்தமான நிறைய வீடியோக்களை ரகு காண்பித்தாராம்.
அப்போது ஆர்வமுடன் பார்த்த சதீஸ்பாபுவிடம் முன்பணமாக ரூ.3 ஆயிரம் பெற்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாந்திரீகம் செய்துவிட்டு 1 மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறி சென்றாராம். ஆனால் 1 மணி நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சதீஸ்பாபு மலைக்கோவில் பகுதியில் சென்று தேடியபோது, அங்கு மற்றொருவரிடம் அதேபோல் கூறி அவர் பணம் பெற முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.
இதை கண்ட சதீஸ்பாபு உடனே அவரிடம் அங்கு சென்று ஏன் ஏமாற்றி பண மோசடி செய்து கொண்டு இருக்கிறாய்? இதெல்லாம் ஒரு பொழப்பா எனது பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டாராம். அதற்கு அவர், நான் கேரளாவை சேர்ந்த மாந்திரீகன், உன்னை மாந்திரீகம் மூலம் ரத்தம் கக்க வைத்து கொன்றுவிடுவேன் என்று ரகு மிரட்டினாராம். இதுகுறித்த சதீஷ் பாபு திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அவர் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்து உள்ளனர்.