2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .
திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழா் திருநாள், பொங்கல் பண்டிகை மற்றும் வழிபாட்டுத் தலங்களின் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம். கடைசி நேர அவசரம் தவிா்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் விண்ணப்பங்களை முன்னரே பெற வேண்டியுள்ளது. எனவே, 2025-ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடைபெறும் 30 நாள்களுக்கு முன் மாவட்ட நிா்வாகத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு, வடமாடு போட்டிகளை நடத்தும் விழாக் குழுவினா் கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அரசாணை விதிமுறைகளைப் பின்பற்றி போட்டியை நடத்த வேண்டும். அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்துவோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விண்ணப்பங்களை உரிய காலத்தில் அளித்து அனுமதி பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.