தொடர்ந்து விளையாட கணவர் அனுமதிப்பாரா ? வரும் 22 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ள பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து பேட்டி
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் தவிர, 2019இல் தங்கம் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக சிந்து உள்ளார்
இந்நிலையில், பி.வி.சிந்துவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை வரும் 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் குடும்பங்களுக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரியும் என்றும், ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் தொடர்பாக அனைத்து முடிவுகளும் இறுதி செய்யப்பட்டது என்றும் சிந்துவின் தந்தை பி.வி.ரமணா தெரிவித்துள்ளார். மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் பி.வி.சிந்துவுக்கு விரைந்து முடிப்பதற்கான பணிகள் நிறைய உள்ளது என்றும், ஆகையால், இதுவே சாத்தியப்பட்ட ஒரே வழி என்றும் பி.வி.ரமணா கூறினார்.
அதனால் தான் டிசம்பர் 22-ம் தேதி திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாகவும், டிசம்பர் 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும், சிந்துவுக்கு அடுத்த சீசன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் விரைவில் அவர் தனது பயிற்சியைத் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிச்சயமாக விளையாடுவேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.வி.சிந்து தெரிவித்திருந்தார்.
சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் உலகின் 119வது ரேங்க் வீராங்கனையான வு லுயோ யுவை தோற்கடித்து இறுதிப் போட்டியில் 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது முறையாக பட்டத்தை வென்றார். மேலும், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் வரவிருக்கும் போட்டிகளில் விளையாடுவேன் என்று பி.வி.சிந்து கூறினார்.