ஒருவரால் வாழ்வு பெற்ற ஆறு பேர்: உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தீராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இவர் சொந்தமாக சிசிடிவி கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 18-ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அய்யம்பாளையம் அருகே கார் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்து, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ரமேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். எனவே, செப்.25-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கண், தோல் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இது இந்த மருத்துவமனையின் 20வது உடலுறுப்பு தானமாகும். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி திருச்சி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது நோயாளிக்கு, மருத்துவமனையின் டீன் குமரவேல் தலைமையிலான நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை நேற்று முன்தினம் வெற்றிகரமாக பொருத்தினர்.
முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையின் 34வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு கண் விழி திருச்சி மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்புகளை தானம் செய்த ரமேஷின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல் தலைமையில், மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சொந்த ஊருக்கு திரும்பிய ரமேஷின் உடலுக்கு லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழநிவேல் மலர் வளையம் வைத்து அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.