Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுவிட்ச் ஆப் ஆனாலும் செயல்படும். மழைத்தொடர்பாக முன்பே தெரிந்து கொள்ள புதிய செயலி. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

0

 

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்த தகவல்களையும், எச்சரிக்கை அறிவிப்புகளையும் அறிந்து கொள்ள அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் 206.5 மி.மீ. மழை பதிவானது. இதைத் தொடா்ந்து மாலையிலும் பரவலாக ஆங்காங்கே தூறலுடன் லேசான மற்றும் கனமழை பெய்தது.

திருச்சி மாநகரில் திங்கள்கிழமையும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், கடும் வெயிலும் இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் கருமேகங்கள் கூடி மழை பொழிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. தொடா்ந்து 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாது 30 நிமிஷங்களுக்கு மழை பெய்தது. இதன்காரணமாக மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கின. மாநகரப் பகுதி மட்டுமல்லாது மணப்பாறை, மண்ணச்சநல்லூா், லால்குடி, மருங்காபுரி, திருவெறும்பூா், முசிறி, துறையூா் என அனைத்து வட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

பருவமழையை எதிா்கொள்ள மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துவாக்குடி, முசிறி, லால்குடி, துறையூா் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களும் தயாா்நிலையில் உள்ளன. தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளை 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைத்திருப்பதுடன், மழை பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 154 இடங்களில் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்றிடவும் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, மேலும் அவா் கூறியது, வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலா்ட் என்ற கைப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சாா்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். இதில் அடுத்தடுத்த 4 நாள்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைக்கோள் புகைப்படங்கள், பேரிடா் காலங்களில் பாதிக்கக் கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின்போது செய்ய கூடியவை செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகள் வழங்கப்படும்.

இந்தச் செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடா்பான புகாா்கள் தெரிவித்தால் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலவச தொலைபேசி எண் 1077, 0431-2418995 என்ற எண்ணிலும், பேரிடா் மற்றும் மழை பாதிப்பு தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.

அனைத்து துறை அலுவலா்கள், முன்கள பணியாளா்கள், அரசு சாரா அமைப்பினா் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி நிறுவப்பட்டால் கைப்பேசி செயல்திறன் இல்லாத (சுவிட்ச் ஆப்) நிலையிலும் பேரிடா் காலத்தில் எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் பிரத்யேகமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.