லால்குடி அருகே சம்பவம்
14 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது.
திருச்சி லால்குடி கீழ வாளாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41). டீக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் உள்ளார்.
மகள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கோடை விடுமுறையில் வீட்டில் இருந்தபோது அவரிடம் தந்தை பிரபு தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அந்த மாணவி தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் பிரபு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பெற்ற மகளையே பாலியல் தொந்தரவு செய்த காமக்கொடூரன் பற்றி சம்பவம் அங்கு உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .