திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
விமான பயணிகளை வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
அவ்வாறு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்த போது அவர் காலணியின் அடி பாகத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த நபர் எடுத்துவந்த தங்கத்தின் எடை 401.5 கிராம் எனவும், அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.28,85,179/- எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பயணியிடம் வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.