தமிழக அரசின் பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்று திருச்சி திரும்பிய சிறுமி சுகிதாவுக்கு சிறப்பான வரவேற்பு.
ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் பலவித பரிணாமங்களை அடைகிறாள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கூற்றை பொய்யாக்கி “ஆணுக்கு பெண் இளைப்பிள்ளை” என்ற பாரதியின் கூற்றை மெய்யாக்கும் வகையில் இன்று உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் சோதனைகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இன்னும் பல பெண்களோ மறைந்த முதல்வர் அம்மா அவர்களையும், அன்னை தெரசா, கல்பனா சாவ்லா, தடகள வீராங்கனை பிடி உஷா என பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனைப் பெண்களை தனக்கு முன் உதாரணமாகக் கொண்டு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
உடலுறுதியுள்ள ஆண்களை விட மனவுறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான். சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணம் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பூ மகள்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவி சுகித்தா தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வழங்கப்படும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவிகளை மற்றும் வளர் இளம் பெண்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றாழை உறுதி செய்யவும் பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் ஜனவரி 24ஆம் தேதி அன்று மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சத்திற்கான செக் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடப்பாண்டு திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மோகன் – பிரபா தம்பதியினரின் மகளான 10ம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தா, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தனது சேமிப்பில் இருந்து சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உதவிகள் செய்வதுடன், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு தன்னால் முயன்ற உதவிகளை வழங்கி மகிழ்ந்து வருகிறார்.
இது மட்டுமன்றி பெண் குழந்தைகள் கல்வி முக்கியத்துவம் மற்றும் இலவச சிலம்ப பயிற்சி அளித்துவரும் இவர் அரசு பள்ளிகளில், மற்றும் திருச்சி மத்திய சிறை கைதிகளுக்கு அவர்கள் நன்னெறி கடைபிடிக்கவும் நல் ஒழுக்கம் மேம்படவும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழங்கியும், பாரம்பரிய மற்றும் கிராமப்புற கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் மாணவி சுகித்தாவின் செயல் திறன் மற்றும் சேவையை பாராட்டி, பிற பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழும் மாணவியின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கான விருதினை பெற்று ரயில் மூலம் திருச்சி வந்தடைந்த மாணவி சுகித்தாவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் மாணவிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் முதல் முதலாக பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெறுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இந்த விருதுநை பெற்றது மிகுந்த, மகிழ்ச்சி அளிப்பதாகவும், என்னை போன்ற மாணவிகளுக்கும் ஏனைய பெண்களுக்கும் நான் பெற்ற விருது உத்வேகம் அளிப்பதாக அமையும் என்பதுடன், தொடர்ந்து அரசால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை கொண்டு ஆதரவற்றவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான உதவிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் அவர்களது முன்னேற்றத்திற்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து கொண்டிருப்பேன் எனவும் மகிழ்வுடன் தெரிவித்தார் மாணவி சுகித்தா.
தொடர்ந்து எண்ணற்ற சுகித்தா போன்ற பெண்கள் இச்சமூகத்தில் உருவாக வேண்டும், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அரங்கிலும் பெண்கள் முன்னேற்றம் பெற வேண்டும் பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.