திருச்சி பெரிய கம்மாளத் தெரு ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி மரக்கடை பெரிய கம்மாளத்தெரு பகுதியில் அருள்மிகு ஶ்ரீ மஹா மாரியம்மன் (மேளக்கார மாரியம்மன்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து முதலாம் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் அடங்கிய கும்பத்தை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பெரிய கம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, பெரிய கடை வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.