திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி ஊராட்சி கவுண்டம்பட்டியைச் சோந்தவா் சின்னு மனைவி சித்ராதேவி (வயது 44). இவா் கடந்த சனிக்கிழமை (ஜன 20) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை லெஞ்சமேடு அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் சித்ராதேவியிடமிருந்து கையில் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனராம். பையில் கைப்பேசி, பதிமூன்றரை சவரன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரிபேரில் வளநாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் பிரதீப் தலைமையிலான வளநாடு போலீஸாா் நேற்று வியாழக்கிழமை வாகன தணிக்கையில் இருந்தபோது போலீஸாரிடம் சிக்கிய இரு இளைஞா்கள் முரண்பட்ட தகவலை அளித்துள்ளனா். இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீஸாா் மேற்கொண்டு விசாரணையில், அவா்கள் எஃப்.கீழையூா் ஊராட்சி சின்னமணப்பட்டியை நல்லுச்சாமி மகன் சிவபாலன் (வயது22) மற்றும் பழனியாண்டி மகன் ராஜேந்திரன் (வயது22) என்பதும் சித்ராதேவியிடம் நகை, பணம் பறித்து சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து சித்ராதேவி கைப்பேசி, பதிமூன்றரை சவரன் நகைகள் மற்றும் ரூ.26500 ரொக்கம், திருட்டு பயன்படுத்திய இருசக்கர வாகனம் அகியவற்றை பறிமுதல் செய்த வளநாடு போலீஸாா் இருவரையும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.