தமிழகம் முழுவதும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம். திருச்சியில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில பொது குழு கூட்டத்தில் தீர்மானம் .
தமிழக முழுவதும் 27-ந்தேதி உண்ணாவிரதபோராட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மயில் தலைமை வகித்தார். டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், முத்து ராமசாமி, தாஸ், தியோடர், சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் திருச்சி நீலகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குபின் மயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் 21ம்தேதி அரசாணை 243ஐ வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான ஊட்டுப்பதவிகளில் தொடக்கக்கல்வித்துறையின் சார்நிலை பணி விதிகளில் திருத்தம் செய்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். தொடக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு 10 சதவீதம் பேருக்கு பலனளிக்கக்கூடியதாக நினைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 243ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
கடந்த அக்டோபர் 13ம்தேதி 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் சென்னையில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அக்.12ம்தேதி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். அக்.13ம்தேதி நடந்த பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டத்திலும், இந்த வாக்குறுதியை இயக்குனர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால், இன்று வரை அந்த 12 கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகப்பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். எனவே, ஏற்கனவே ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இந்த 2 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, டிட்டோ ஜாக் சார்பில் ஜனவரி 11ம்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களில் மாலை நேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், ஜனவரி 27ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத அறப்போராட்டமும் என 2 கட்ட போராட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் டிட்டோஜாக் திட்டமிடல் கூட்டம் 6ம்தேதி நடைபெறும். இந்த 2 போராட்டங்களுக்கு பின்பும் தமிழக 2 கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிட்டோ ஜாக் மிகக்கடுமையான போராட்டங்களை திட்டமிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.