திருச்சியில் வீட்டில் நுழைந்த 5 அடி நீள பாம்பு
தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்
படம் உண்டு,
திருச்சி, ஜன. 4:
திருச்சியில் வீட்டில் நுழைந்து 3 மணிநேரம் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை லாவகமாக பிடித்தனர்.
திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியில் 5 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் கீழ்வீட்டில் வியாழக்கிழமை முற்பகலில், சுமார் 5 அடி நீள பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டிலிருந்த ராஜேஸ்வரி பாம்பைக் கண்டு சத்தமிட்டார். இதனையடுத்து நுழைவாயில் அருகேயிருந்த மாடிப்படி மற்றும் குளியலறை பகுதியில் சென்ற பாம்பு பதுங்கிக்கொண்டது. இது குறித்து திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சோமரசம்பேட்டை பகுதிக்கு சென்றிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்துவிடுவர் அதுவரை பாதுகாப்பாக இருக்குமாறும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை தேடியும் கிடைக்கவில்லை. சுமார் 3 மணி நேரமாக பயத்துடன் காத்திருந்தனர். ஒரு வழியாக தீயணைப்பு வீரர்கள் வந்ததும். பாம்பை தேடினர். எங்கும் பாம்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (நீண்ட நாள்களாக இயக்கப்படாத) இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின்பேரில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்து அதை சோதித்தபோது, பெட்ரோல் டேங்க் உறை (கவருக்குள்) பதுங்கியிருந்த பாம்பு வெளியே வந்தது. அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு படை வீரர்கள் பின்னர் பாதுகாப்பாக பைக்குள் வைத்து வனப்பகுதியில் விடஎடுத்துச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதை யூகித்த வீரர் அது கடிக்க வாப்பிருந்தும், தைரியமாக இருசக்கர வாகனத்தை தள்ளிச்சென்று அதிலிருந்த பாம்பை சக வீரர்களுடன் இணைந்து பிடித்ததை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். வியாழக்கிழமை ஒருநாளில் மட்டும் திருச்சி மாவட்ட உதவி அலுவலரும் கன்டோன்மென்ட் நிலைய அலுவலருமான சத்தியவர்த்தன் தலைமையிலான தீயணைப்பு மீட்புக் குழுவினர் சோமரசம்பேட்டை, கருமண்டபம், தென்னூர், விமான நிலையம் என 4 பகுதிகளில் தலா 1 வீதம் மொத்தம் 4 பாம்புகளை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.