இங்கிலாந்தின் தொடரும் பரிதாபம். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறாத அணியிடம் தொடரை இழந்தது .
பிரிட்ஜ் டவுன் : 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் களமிறங்கி அரையிறுதிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது.
இந்த நிலையில் இழந்த பெருமையை மீட்போம் என்று சூளுரை உரைத்த இங்கிலாந்தின் கேப்டன் ஜாஸ் பட்லர் வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கினார்.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. இதனை அடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 40 ஓவர் கொண்ட போட்டியாக நடைபெற்றது . இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரன் பில் சால்ட் 4 ரன்களிலும் வில் ஜேக் 17 ரன்களிலும் ஜாக்கிராலி டக் அவுட் ஆகியும் ஹாரி புரூக் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜாஸ் பட்லர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் டக்கட் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். அவருக்கு லியாம் லிவிங்ஸ்டோன் பக்க பலமாக நின்று 45 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
இதனை அடுத்து போட்டி 34 ஓவராக குறைக்கப்பட்டு இலக்கு 188 ரன்கள் என்ற மாற்றி அமைக்கப்பட்டது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் 45 ரன்கள் கெய்சி கார்ட்டி அரை சதமும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
இறுதியில் செர்பேன் ருதர்போர்ட் 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 31.4 ஓவர்கள் எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இது ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு பெரும் சோகமாக அமைந்திருக்கிறது. உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வியை தழுவி இருப்பது பட்லரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி இருக்கிறது.