கோவில் திருவிழாகளில் திருடும் திருச்சி பெண்கள் புதுவையில் 6 மாநில போலி ஆதார் அட்டைகளுடன் சிக்கினார் .
புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் அதிகமாகி வந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டம் அதிகமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பர்வீன் என்பவர் புதுச்சேரியில் விழா ஒன்றுக்கு வந்து திரும்பியபோது பேருந்தில் அவரது நகை திருடுபோனது. இதனைத்தொடர்ந்து அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகையை பறிகொடுத்த பர்வீன், குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்.
அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனையிட்டனர். அப்போது ஓட்டலில் ஊழியர் ஒருவரிடம் விசாரித்தபோது திருவிழாவிற்காக திருச்சியில் இருந்து 5 பெண்கள் வந்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அறைக்கு சென்று சோதனையிட்டபோது திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சத்யா, திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வித்யா ஆகியோர் பிடிபட்டனர். மேலும் அவர்களிடம் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு புதுச்சேரி என உட்பட 6 மாநிலங்களின் முகவரி கொண்ட போலி ஆதார் அட்டைகள் இருந்தன.
தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும்போது ஒரு பேரை சொல்லி அறை எடுத்து தங்கி அந்த ஊரில் நடைபெறும் கோயில் விழாக்களுக்கு சென்று பெண்களின் நகை பறிப்பது தான் இவர்களது திட்டம் என்பது தெரியவந்தது. இதுவரை பல மாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த இவர்கள் புதுச்சேரியில் சிக்கியுள்ளது -தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு அவர்களை ஆஜர்படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள், செல்போன்கள், போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இவர்கள் இருவர் மீது தென்மாநிலங்களில் பல காவல் நிலையங்களில் கோயில் திருவிழாக்களில் பெண்களின் நகைகளை திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோயில் திருவிழாக்களுக்கு வரும் பெண்கள் பய பக்தியோடு மெய்மறந்துள்ள நேரத்தில் நகை திருடுவது இவர்களது வாடிக்கை. அங்கு சிசிடிவியில் சிக்காதவர்கள் பேருந்தில் சிசிடிவி இருக்காது என நினைத்து கைவரிசை சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.