Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல். போலீஸ் கமிஷனர் அதிரடி

0

'- Advertisement -

 

திருச்சி மாநகரில் காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

குறிப்பாக மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகில் போதை பொருள்களை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தனிப்படை அமைத்து மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 170 கிலோ குட்கா, புகையிலை போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு புகார் வந்ததை அடுத்து , காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை பகுதி ஆகிய பகுதியில் உள்ள 3 கடைகளில் குட்கா ,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கும் திருச்சி மாநகர் காவல்துறை ஆணையர் காமினி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செய்தியாளரிடம் கூறுகையில்…

உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருச்சி மாநகர காவல் துறையும் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யும் கடைகள் சோதனை செய்யப்படுகிறது அதன்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசு உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு தயவு தாட்சனை இல்லாமல் தண்டிக்கப்படுவர். இனி தொடர்ந்து இந்த சோதனையின் நடைபெறும்.
இன்று ஒரு நாளோடு சோதனை முடியாது. திடீர் சோதனைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறும். தமிழக முழுவதும் நடைபெறும் இந்த சோதனைகளில் திருச்சி மாநகரிலும் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வருடத்தில் மட்டும் 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் தொடர்ந்து போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை குறித்து தொடர்ந்து காவல்துறை தரப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே விழிப்புணர் நிகழ்ச்சிகள் காவல்துறை தரப்பில் நடத்தப்பட்டது. ஆகையால் அரசின் விதிகள் படி அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலை, போதை மாத்திரை போன்ற எந்த விதமான போதைப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது . அவ்வாறு தடைகளை மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதே சமயம் தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.