
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும், இருப்பு வைத்துக் கொள்ளவும் உரிமம் கோரும் விண்ணப்பங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இணையம் மூலம் விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008ஆம் ஆண்டுக்குள்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி பெறாமல், உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தொடா்புடைய நபா்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

