
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் சோதனை மேற்கொண்டபோது, விஜயலெட்சுமி என்பவா் கொண்டு வந்த கைப்பையில் அரியவகை 2 அணில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மேலும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வந்தனா்.
இது தொடா்பாக, திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலா் எஸ். சதீஷ், மாவட்ட வன அலுவலா் ஜி. கிரண் உத்தரவின்பேரில், திருச்சி வனச்சரக அலுவலா் கோபிநாத் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.
இப்படையினா் சென்னை, கடலூா் பகுதிகளில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், விஜயலெட்சுமியிடமிருந்து அணில்களை பெறக் காத்திருந்த, சென்னை சூளைமேடு பகுதியைச் சோந்த சுல்தான் இப்ராஹிம் ( வயது 29 ), அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சோந்த சாகுல்அமீது (வயது 28) மற்றும் விஜயலட்சுமி ஆகியோரை வனத்துறையினா் கைது செய்தனா்.
பிறகு, 3 பேரையும் திருச்சி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அணில்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை கிண்டி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

