Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆப்பிள் மில்லட் வீரசக்தி உள்ளிட்ட 3 நியோ மேக்ஸ் இயக்குனர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்.

0

'- Advertisement -

 

ஆப்பிள் மில்லட் வீர சக்தி மற்றும் நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஓராண்டு காலமாகவே புகார் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிறுவனம் பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், நியோ மேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வீரசக்தி உள்பட மூன்று பேர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர், ஜெயசங்கீஸ்வரன் ரூ.73.50 லட்சத்தை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். வட்டியும் தரவில்லை முதலீடு செய்த பணத்தையும் தரவில்லை என்கிற புகார் காரணமாக, மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி குப்புசாமி தலைமையில் நடைபெற்ற சோதனையில் நியோ மேக்ஸ் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்தது ஊர்ஜிதமானது. மேலும், நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என பல ஊர்களில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். நியோ மேக்ஸ், சென்ட்ரியோ ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லை கிளை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் நிறுவன பங்குதாரர்களின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டதாகவே கணக்கில் காட்டி மோசடி செய்திருக்கின்றனர் என்று முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.