மண்ணச்சநல்லூரில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை
மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தத்தமங்கலம் ஊராட்சியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்படும் பணி,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பில் தத்தமங்கலம் பாம்பாலம்மன் கோயில் முதல் தழுதாளப்பட்டி வரத்து வாரி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகள்,
ரூ.9.04 லட்சத்தில் பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமான பணி,
மேல்பத்து ஊராட்சியில் சுனைப்புக நல்லூர் கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.31.56 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஸ்ரீதர், முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, ஜோசப்கெனடி, வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.