.திருச்சி பொன்னகரில்
உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி
செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்கள்.
திருச்சி பொன்னகரில் நடந்து சென்ற அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் டீ.ஏ பட்டி டி.கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தன் (வயது 44). தற்போது இவர் திருச்சி பொன்னகர் 11-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் திருச்சி பொன்னகர் 11-வது கிராஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் இவரை சரமாரியாக தாக்கி விட்டு, இவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதில் உணவு பாதுகாப்பு அதிகாரி வசந்தனுக்கு முகம், கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கி விட்டு தப்பி ஓடிய 3 நபர்களை தேடி வருகிறார் .
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பல்கலைக்கழக பேராசிரியையை தாக்கி, தரதரவென சாலையில் இழுத்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற கொள்ளையன் பற்றிய வீடியோ பரபரப்பாக வெளியான நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.