Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வடநாட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.எஸ்.ஆர். எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் வடநாட்டு ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.

சென்னை தலைமைச் செயலக அதிகாரியிடம் விசாரணை.

திருச்சி சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் பீகாரைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலக அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில்
டிக்கெட் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார்.

நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ‘சேது’ அதிவிரைவு ரயிலில் திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பணியில் சேர்ந்தார்.
இந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் செல்லும் போது டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும், பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த பயணி சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
அந்த தலைமைச் செயலக ஊழியர் ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முத்தியதில் டிக்கெட் பரிசோதகரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, இரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் டிக்கெட் பரிசோதகர் எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் எஸ்.ஆர்.எம்.யூ தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன் ரயில்வே பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் தாக்கியவர் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் குமார் கூறியதாவது:-
எனது பணியில், எஸ் -8, எஸ் – 9,எஸ் -10, எஸ் -11, எஸ்-12,ஆகிய 5 இரயில் பெட்டிகளில் பயணிகளது பயணச்சீட்டை பரிசோதனை செய்தேன்.

எஸ்.10 பெட்டியில் 7 இருக்கை டிக்கெட் பரிசோதகருக்கானது.டிக்கெட் பரிசோதகரின் இருக்கையில், 8வது இருக்கையில் இருக்க வேண்டிய பயணி ஒருவர், குடிபோதையில் தனது உடமைகளை வைத்துவிட்டு, ரயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார்.
உங்களது உடைமைகளை உங்களது இருக்கையில் வைத்துக் கொள்ளுங்கள். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக உறங்காதீர்கள் என பணிவாக கூறினேன்.
அப்போது குடிபோதையில் என்னை தகாத வார்த்தைகளில் பேசத் தொடங்கிய அந்த பயணி என்னை கன்னத்தில் பளாரென தாக்கி விட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்து பூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.

இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறும்போது,
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் ஜாதி இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இந்த விஷயத்தில் மொழி வேறுபாட்டினால் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்படவில்லை.
தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கம் ஓயாது என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.