திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் ஜானகி. இவர் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்தார். பேசியபடி பணம் கிடைக்காததால் குழந்தையை கடத்தியதாக ஜானகி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜானகி, வழக்கறிஞர் பிரபு, சண்முக வள்ளி ஆகியோர் சேர்ந்து குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சண்முகவள்ளி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், வழக்கின் விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது. குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கூறினார்.
இதையடுத்து சண்முக வள்ளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.