அரசால் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அடியாட்கள் வைத்து பறித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்.


தமிழக அரசால் வழங்கப்பட்ட
இலவச வீட்டு மனை நிலங்கள் அபகரிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் பரபரப்பு புகார்
திருச்சி இ.பி. ரோடு கருவாடு பேட்டை பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் மனைவி முத்தம்மாள், கீரை கொள்ளை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாத்தி, திருச்சி பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த நீலா, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-
நாங்கள் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம்.வீடுகள் இல்லாத எங்களுக்கு கடந்த 1997 ம் ஆண்டு பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு தமிழக அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று சென்ட் நிலம் வீதம் நவல்பட்டு பூலாங்குடி கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

எங்களுடன் சேர்த்து மொத்தம் 250பேருக்கு அப்போது பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பட்டா ஆவணங்களை அடியாட்களை வைத்து மிரட்டி பிடுங்கி வருகிறார். மேலும் நிலம் என்னுடைய பூர்வீக இடம்.
உங்களுக்கு யாருக்கும் இதில் உரிமை இல்லை .ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் தருகிறேன் என மிரட்டி எங்களிடமிருந்து பட்டாக்களை பறித்து வைத்துக் கொண்டு வேறு நபர்களுக்கு இரண்டு லட்சம் மூன்று லட்சம் என விற்பனை செய்து வருகிறார்.
அது மட்டும் அல்லாமல் எங்களை ஜாதி பெயர் கூறி ஆபாசமாக பேசுகிறார் மேலும் அந்த இடத்தில் அடியாட்களை வைத்து எங்களை நுழைய விடாமல் தடுத்து வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுகிறார்.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவரும் எங்களது இடத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் வீடு கட்டி வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

