Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேயின் வரலாறு.

0

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார்.

கால்பந்து விளையாடத் தொடங்கும் ஒவ்வொரு வீரரும் பீலேயின் பெயரை உச்சரிக்காமல் தனது கால்களை முன்னே நகர்த்தியதில்லை. அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டு, பீலேயும் பிரிக்க முடியாததாக விளங்கினார்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த பீலே உடல்நலக்குறைவால் டிசம்பர் 29ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 82.

பீலியின் உண்மையான பெயர், எட்சன் அரான்டென் டூ நசிமென்டோ. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீலே, சாபோலோ நகரில் உள்ள ஆல்பர்ட் எயின்ஸ்டீன் இஸ்ரேல் மருத்துவமனையில் டிசம்பர் 29ம் தேதி காலமானார். இந்த செய்தியை பீலேயின் மகள் கேலி நசிமென்டோவும் உறுதி செய்தார்.

கடந்த 1940ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி, டிரஸ் கோரோசியஸ் எனும் நகரில் பீலே பிறந்தார். பிறக்கும்போதே சிலர் கால்பந்தாட்ட வீரர்களாக, கிரிக்கெட் வீரர்களாகப் பிறப்பார்கள். அதுபோலப் கால்பந்தாட்ட வீரராகப் பிறந்தவர் பீலே. தனது 15வது வயதிலேயே பிரேசில் தேசிய அணிக்காக பீலே விளையாடினார். அதன் பின் தனது 17வயதில் 1958ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில் அணிக்காக பீலே களமிறங்கினார்.

1957ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி மராகனா நகரில் நடந்த சர்வதேச கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பீலே பிரேசில் அணியில் முதன்முதலாக அறிமுகமாகினார். தனது 16வயதிலேயே முதல் கோலை பீலே அடித்தார்.

பிரேசில் கால்பந்தாட்ட அணியில் பார்வேர்ட் வீரராக அறியப்பட்ட பீலே, உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் என்பதைவிட கால்பந்தாட்ட ஜாம்பவான் என்று கூறலாம். 20-ம் நூற்றாண்டின் வெற்றிகரமான கால்பந்தாட்ட வீரர்களில் பீலே முக்கியமானவர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கடந்த 1999ம் ஆண்டு இந்த நூற்றாண்டின் சிறந்த வீரராக பீலே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 பேரை டைம் நாளேடு பட்டியலிட்டதில் அதில் பீலேயும் ஒருவராக இருந்தார்.

பீலே 1263 போட்டிகளில் விளையாடி,1,279 கோல்களை அடித்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 15வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கி, 17வயதில் தேசிய அணியில் இடம் பெற்ற பீலே, 1958, 1962 மற்றும் 1970 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 1958ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஓ ரீ(தி கிங்) என்ற அடைமொழியுடன் பீலே களமிறங்கினார். கிளப் அளவில் சான்டோஸ் அணிக்காக விளையாடிய பீலே 659 போட்டிகளில் 643 கோல்களை அடித்துள்ளார்.

 

சான்டோஸ் அணியை பீலே கேப்டனாக வழிநடத்திய காலம் என்பது அந்த அணிக்கு பொற்காலம் என்றே கூறலாம். 1962, 1963 கோபா லிபர்டாடோரஸ், இன்டர்கான்டினன்டல் கோப்பையில் பீலே சான்டோஸ் அணியை வழிநடத்தினார்.

பிரேசில் அணிக்காக 3 முறை உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர், கால்பந்தாட்டப் போட்டியில் 92 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் என்ற பெருமை பீலேவுக்கு உண்டு. பிரேசில் அணியை உலகக் கோப்பை மட்டுமின்றி, டாகா டோ அட்லான்டிகோ, ரோகோ கோப்பை, டாகா ஓஸ்வால்டோ, கோபா பெர்னார்டோ ஆகிய போட்டிகளிலும் பீலே வழிநடத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டை பரப்பியவர் பீலேதான். அங்குள்ள கால்பந்து கிளப்பான நியூயார்க் காஸ்மோஸ் கிளப்பில் தனது ஓய்வுக்குப்பின் விளையாடினார்.

கடந்த 1994ம் ஆண்டு யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராக பீலே நியமிக்கப்பட்டார். கடந்த 1995ம் ஆண்டு பிரேசில் அதிபர் பெர்னான்டோ கார்டோசோ பீலேவை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்தார். 1997ம் ஆண்டு பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் இருந்து நைட்வுட் பட்டத்தையும் பீலே பெற்றுள்ளார்.

பீலேயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள செய்தியில் ” இன்று அமைதியாக காலமான தி கிங் பீலேயின் பயணம் உத்வேகமும் அன்பும் நிறைந்தது.

அவரது பயணத்தில், எட்சன் தனது விளையாட்டால் உலகை மயக்கினார், ஒரு போரை நிறுத்தினார், உலகம் முழுவதும் சமூகப் பணிகளைச் செய்தார், மேலும் நமது எல்லா பிரச்சனைகளுக்கும் அன்பால் தீர்வு காண முடியும் என்று நம்பி அதை மக்களிடம் பரப்பினார்.

அவரின் இன்றைய செய்திதான் எதிர்காலசந்ததியினருக்கான மரபாக அமையும்.
அன்பு, அன்பு, என்றென்றும் அன்புதான்- அந்த செய்தி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.