கொலை, கொள்ளை வழக்குகளில்
தொடர்புடைய இளைஞர் கைது.
திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார், மணிகண்டம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
வேகமாக இருசக்கர வானகத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில்,
அவர் திருச்சி திருவானைக்கா, பாரதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் ரெங்கன் என்ற ரெங்கநாதன் (25) என்பதும், அவர் மீது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மணிகண்டம் ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே அப்பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (வயது 28) என்பவர் இரவில் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றனர். அதில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 18), மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் முதல் குற்றவாளி ரெங்கன் என்ற ரெங்கநாதன் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ரெங்கநாதனை கைது செய்த போலீசார் அவவை திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.