திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை (வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த ஐந்தே முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது அதிர்ச்சி அடைந்த கனகாம்பிகை திருடன் திருடன் என கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு தப்பியோட முயற்சித்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் உறையூர் போலீசார் அங்கு வந்து திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டது மண்ணச்சநல்லூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த சசிகுமார்(வயது 31) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். வீடு புகுந்து கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த கனகாம்பிகை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.