உடல் நிலையை கருத்தில் கொண்டே
மடாதிபதி பதவியை துறந்ததாக
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பேட்டி.
தொண்டை மண்டல ஆதீனம் 233வது பட்டம் குருமகா சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது;-
தொண்டை மண்டல சைவ முதலியார்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தொன்மை மிகு தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச சுவாமிகள் மடத்தின் 233வது மடாதிபதியாக கடந்த ஆண்டு நான் தேர்வு செய்யப்பட்டேன்.
மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நாள் முதல், என்னால் முடிந்த வரை திருமடத்தை சிறப்பாக நடத்தி வந்தேன். சிறிது காலமாக, எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படியும், என் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, முழு மனதுடன் மடாதிபதி பதவியை துறக்க முடிவு செய்தேன்.
என் பதவி விலகல் கடிதத்தையும், மருத்துவர்களின் பரிந்துரை நகலையும், திருச்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மூலமாக, ஆலோசனை குழுவினருக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் நடைபெற்ற
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், என் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, பதவி விலகலுக்கு ஆதரவு அளித்தனர். அதைத்தொடர்ந்து ஆலோசனை குழுவினர், எனது பதவி விலகலை உறுதி செய்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளும், எனது பதவி விலகலை சட்ட விதிகளின்படி பரிசீலித்து ஏற்றுக் கொண்டனர்.
எனவே, நான் மடாதிபதி பொறுப்பில் இருந்து விலகி விட்டேன். ஏற்கனவே, இதயக் கோளாறு தீவிரமடைந்து விட்டதாக, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால், ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பி, நானே என் சுய விருப்பப்படி பதவி விலகி இருக்கிறேன்.
உண்மைக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும் மாறாக, எனது பதவி விலகலை, ‘நிர்பந்தப்படுத்தப்பட்ட பதவி விலகலாக சித்தரித்து தவறான செய்திகள் உலவி வருவதை, யாரும் நம்ப வேண்டாம்.
மடத்தின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களும், அனுபவிக்க ஆசைப்படுபவர்களும், அவர்கள் மூலம் ஆதாயம் அடைய நினைப்பவர்களும், சுயநலத்திற்காக ஆலோசனை குழுவினரையும், அரசு அதிகாரிகளையும் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விமர்சித்து கொண்டு இருக்கின்றனர்.
எனவே, சூழ்ச்சிகள் மிகுந்த இச்சூழலை கருத்தில் கொண்டு, தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், உறுதியுடனும் இருந்து திருமடத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.