திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்.
திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தலைவர் சவுதிரராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்கண்ணா, இணை செயலாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருச்சியில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.6½ கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
சங்க உறுப்பினர் எஸ்.சங்கீதா என்பவரின் வீட்டிற்குள் கடந்த 3-ந்தேதி அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கிய 5 பேர் மீது அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் உரிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யாமலும், அதில் 2 பேரை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அறந்தாங்கி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியை உடனடியாக பணியிடமாற்றம் செய்யக்கோரியும்,
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், 11-ந்தேதி(இன்று) ஒரு நாள் கோர்ட்டு பணிகளில் இருந்து விலகி இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இன்று திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிப்பு செய்தனர். இதனால் இன்று கோர்ட்டு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

