டி20 உலகக் கோப்பை தொடரில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக வீரருக்கு சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம்.
சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட தமிழகத்தைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
.
தமிழகத்தில் காரைக்குடியை பூர்வீமாகக் கொண்ட இவர், திருச்சியில் பிறந்தவர். சென்னை, மதுரை, கோவையில் பள்ளிப் படிப்பை பயின்றவர். இவரது தந்தை மெய்யப்பன் தொழில்நிமித்தம் துபையில் குடும்பத்துடன குடிபெயர்ந்தார். இதையடுத்து மேல்நிலைக் கல்வி, உயர்ல்வியை துபையில் முடித்த கார்த்திக் மெய்யப்பன், ஐக்கிய அரபு அமீரக அணியில் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அண்மையில், டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பனுகா, அசலங்கா, தசுன் ஷனகா என தொடர்ந்து மூன்று முக்கிய வீரர்களை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். 2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளில் நெட் பவுலராக பணியாற்றியவர்.
இவர், திருச்சிக்கு புதன்கிழமை வருகை தந்தார். இவருக்கு, ரத்னா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறுவன உரிமையாளர் எல். ரத்தினகுமார், வருங்கால வைப்பு நிதி ஆய்வாளர் எஸ்.ஆர். சாந்தி, ஆலோசகர்கள் டி. சதீஷ், எஸ். சாந்தி ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில், சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பனின் உறவினர்கள் எஸ்.பி. மீனாள், எஸ்.பி. செந்தில் ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கார்த்திக் மெய்யப்பன் கூறியது:
சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஏனெனில், எனது தந்தை மெய்யப்பன் கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என விரும்பியவர். சுழற்பந்து வீச்சாளராக விரும்பினார். அவரது நிறைவேறாத ஆசையை நான் சுழற்பந்து வீச்சாளராகி நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடக்கத்தில் வேகப் பந்து வீச்சாளராகவே இருந்தேன். பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினேன். எனது அதிகபட்ச ரன் 97 ஆக உள்ளது. ஆனால், திடீர் திருப்பமாக சுழற்பந்து வீச்சாளராக மாறிவிட்டேன். துபை, சார்ஜா, அபுதாபி என மூன்று மைதானங்களில் அதிக எண்ணிக்கையில் விளையாடி உள்ளேன். சார்ஜா மைதானம் சிறியதாக இருப்பதால் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது. அபுதாபி பெரிய மைதானம் என்பதால் சுழற்பந்துக்கு சற்று கடினம். எனது விளையாட்டு அனுபவத்தில் டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தது மறக்க முடியாதது. தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அணியிலே விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் எங்களது அணியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம். வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில், சிறந்த வீரரான தோனியின் அணியில் இடம்பெற எல்லோருக்கும் ஆர்வம் உண்டு. நானும் தோனியுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன். ஏற்கெனவே ஐபிஎல போட்டியில் நெட் பவுலராக இருந்துள்ளேன். எப்போதும், எனது ரோல் மாடலாக ஷேன் வார்னே உள்ளார். சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் பங்கேற்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முந்தைய சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் அவர்