வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் :
ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து
முடுக்குப்பட்டியில் ஆர்பாட்டம்.
திருச்சியில் முடுக்குப்பட்டி பகுதியில், வீடுகளை ரயில்வே நிர்வாகத்தினர் காலி செய்யச்சொன்னதால், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் மேற்றும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி முடுக்குப் பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரயில்வே நிர்வாகம் சார்பில் 110 குடும்பத்தினர் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த நோட்டீஸில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அதில், குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நோட்டீஸ் ஒட்ட வந்த ரயில்வே நிர்வாக பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில்…
கடந்த 1999 ம் ஆண்டு முடுக்கு பட்டியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வந்தன. அப்பொழுது இந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி இங்கு உள்ளவர்களை காலி செய்ய வைத்து மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலத்தில் வீடு ஒதுக்கி கொடுத்தனர்.
அதன்பிறகு கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ரயில்வே நிர்வாகம் அந்த வீடுகளை காலி செய்யுமாறு கூறி வந்தனர்.
இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் உரிமை சட்டத்தில் இந்த இடம் யாருடையது என்று கேட்டபோது இது தமிழக அரசு இடம் என்று தகவல் கிடைத்துள்ளது.
எனவே அதிலிருந்து இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது கிடையாது என்று தெளிவாகிறது. இதையடுத்து நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசித்து வருகிறோம். இந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தினர் வீட்டை காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பல வருட காலமாக இங்கு குடியிருக்கும் நாங்கள் மின்சாரம், சாலை வசதியை தமிழக அரசு செய்து தந்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க பட்டா வழங்க வேண்டும் என கூறினர்.
இந்த பொதுமக்கள் பிரச்சனையில் அப்பகுதி (49 வார்டு) திமுக கவுன்சிலர் லீலா வேலுவும் மக்களுடன் மக்களாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.