
மீண்டும் எடப்பாடி அணிக்கு தாவிய திருச்சி அ.தி.மு.க. பிரமுகர்கள்
ஓ.பி.எஸ். கூடாரம் காலி.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் பிரச்சனை நீடித்து உள்ளது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.
இதில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் , அவரது மகன் ஜவகர் உள்ளிட்ட சிலரை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார்.
ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கினார்கள்.
தொடரும் பிரச்சனையால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்த ஒன்று இரண்டு பேரும் எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினரும் மாநகர் மாவட்ட துணைச் செயலாளருமான பத்மநாதன் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஐக்கியமானார்.
அப்போது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் உடன் இருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும்,
திருச்சி மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞருமானவக்கீல் ராஜ்குமார் திடீரென ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணியில் சேர்ந்துள்ளார்.
வக்கீல் ராஜ்குமார் தற்போது திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளார்.
இது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் பலம் மேலும் கூடிக்கொண்டே செல்வதால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓபிஎஸ் கூடாரம் திருச்சி மாநகரில் காலியாகி வருவதாக எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் எஞ்சி இருக்கும் ஒரு சிலரும் விரைவில் அணி மாற ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

