Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புள்ளாச்சி குடியிருப்பு அரசு பள்ளியில் முப்பெரும் விழா. அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார்.

0

புள்ளாச்சி குடியிருப்பு அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நிதி வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

:ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் தனித்தறமைகளை கண்டறிந்து அவர்களை கௌரவிக்க விளையாட்டுப்போட்டிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகளும், பாராட்டுகளும் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா, மாணவர்கள், பெற்றோர்களுக்கான பாராட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் நடைபெற்றது.

விழா தொடங்குவதற்கு முன்பாக பெற்றோர்களும் கிராமத்தினரும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான பொருட்களை மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டத்துடன் கல்விச்சீராக பள்ளிக்கு அளிக்க தயார் நிலையில் இருந்தனர்.
அவர்களோடு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ,கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் கல்விச் சீர் தட்டினை கையில் ஏந்தி பள்ளிக்கு நடந்தே வந்தனர்.

அவர்களுக்கு முன்பாக பேரரசர் சிலம்பாட்ட மாணவர்களின் சிலம்பம், மான்கொம்பாட்டம்,வாள்வீச்சு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அமைச்சர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பார்த்து ரசித்து படியே நடந்து வந்தனர்.

பின்னர் விழாவனது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட சுற்றுச் சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாணவர்களையும் பெற்றோர்களையும் பாராட்டி பேசியதாவது:

நான் வறுமையின் பிடியில் இருந்து அரசுப் பள்ளியில் படித்து தான் வளர்ந்தேன்.பல நாள் பட்டினியோடு தான் படித்தேன்.கல்வி ஒன்று தான் அழியாத செல்வம்.நாம் கற்ற கல்வி தான் இறுதி வாழ்க்கை வரை நம்முடன் வரும்.. கல்வி தான் நமக்கு மதிப்பை பெற்றுத்தரும் எனவே பெற்றோர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வையுங்கள்.
பெற்றொர்களே குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்.
குழந்தைகள் விளையாடும் பொழுது தான் அவர்களது உடல் உறுதியாகவும் ,மனசு சந்தோசமாகவும் இருக்கும்.நன்றாக விளையாடும் குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்றார்.

பின்னர் விழாமேடையில் ஐந்தாம் வகுப்பு மாணவி லக்‌ஷயா வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக ரூ 35 ஆயிரம் நிதி வழங்கி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க கேட்டுக் கொண்டார்.அதே போல் பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும்,பள்ளிக்கு தேவையான கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசியதாவது: இன்று மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க காரணம் தமிழகத்திற்கு மிகச்சிறந்த அமைச்சர் விளையாட்டுதுறை அமைச்சராக இருப்பது தான்.
அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் குடும்பச் சூழ்நிலை அறிந்து தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலைச்சிற்றுண்டி திட்டம் வரவேற்க கூடிய திட்டமாகும்.
நானெல்லாம் தனியார் பள்ளியில் படிக்கவில்லை.
அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.அரசுப் பள்ளியை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது.எனவே இது போல கல்விச் சீர் கொண்டு மாணவர்களின் தேவை அறிந்து பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள்,
கிராமத்தினர் உதவிட வேண்டும் என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பேசியதாவது: தமிழக முதல்வர் அவர்கள் பள்ளிமேலாண்மைக்குழு மூலம் பள்ளியின் வளர்ச்சியினை மேம்படுத்திட வேண்டும் என எண்ணுகிறார்.
அவரின் எண்ணப்படி இன்றைய தினம் புள்ளாச்சி குடியிருப்பு மக்கள் பள்ளி வளர்ச்சிக்கு கல்விச் சீர் கொண்டு வந்துள்ளீர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்திலே இந்தாண்டு மொத்தம் 3 பள்ளிகளில் தான் ஆண்டு விழா நடந்து உள்ளது.அதில் இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவும் ஒன்று.அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வெழுதி வந்துள்ளார்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களை நம்புங்கள்
பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளை தங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் சேருங்கள்.அரசுப் பள்ளிக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

விழாவில் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது பெற்றோர்களுடன் மேடை ஏற்றி பதக்கங்களும், பரிசுகளும், மஞ்சள் பையில் வைத்து மரக்கன்றுகளும் அமைச்சர் கையால் வழங்கப்பட்டது.

முப்பெரும் விழாவின் அடையாளமாக பள்ளி வளாகத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மரக்கன்று நட்டார்.

விழா குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுரேஷ் கூறியதாவது: எங்கள் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு விழா என்றவுடன் மிகழ்ந்த மகிழ்வோடு இருந்தார்கள். வீடு வீடாக போய் தாம்பூலத்தில் பாக்கு,வெத்தலை வைத்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததால் வீட்டில் உள்ள அனைவரும் குடும்ப விழாவாக கருதி ஆண்டு விழாவிற்கு வந்திருந்தனர்.
சின்ன பள்ளிக் கூடமாக இருந்தாலும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நாடகங்களும் காண்போரை கவரும் விதமாகவே இருந்தது.

12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழாவை ஊர்பொதுமக்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடியதும்,
பள்ளி விழாவை காண அருகில் உள்ள கிராமத்தினரும் வந்திருந்ததும் மனதிற்கு மகிழ்வாக இருந்தது என்றார்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியை வளர்மதி வரவேற்றுப் பேசினார். இடைநிலை ஆசிரியை சித்ரா ஆண்டறிக்கை வசித்தார்.

திருவரங்குளம் ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக் குழு துணைத்தலைவர் ஆனந்தி ஞான இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் சுவிதா இராஜபாண்டியன், வடகாடு ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் தங்கராஜ், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஷீலா நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.