Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.

0

திருச்சி மாவட்டத்தில் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள் , வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர் வாருவதற்கு திருச்சி மாவட்டத்திற்கு ரூ .18.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் 232.59 கி.மீ நீளத்திற்கு மொத்தம் 90 பணிகள் நடைபெற்று வருகின்றன .

திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் கால்வாய் , குடமுருட்டி ஆறு , கொடிங்கால் , நந்தியாறு , பங்குனி வாய்க்கால் , சோழகம்பட்டி வாரி , ஆனந்தகாவேரி , கோரையாறு , அரியாறு போன்ற வாய்க்கால் மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன .

 

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.80 கோடி செலவில் காவிரி பாசன பகுதிகள் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நடைபெற்றுவரும் இப்பணிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

காவிரி பாசன பகுதிகளில் ரூ.80 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் பகுதிகளிலும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை தொகுதி பாகுபாடு பார்க்காமல், எல்லா தொகுதிகளிலும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

அரியாறு , கோரையாறு , குடமுருட்டி ஆறு மற்றும் கொடிங்கால் வாரி ஆகியவற்றில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வாரும் பணிகளை மே 31ஆம் தேதிக்குள் விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள் .

இப்பணிகளை கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் குழுக்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரராஜன், ஸ்டாலின் குமார், ஒன்றிய குழுத்தலைவர் மாத்தூர் கருப்பையா, நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.