திருச்சி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர், இதில் கணக்கில் வராத 9 லட்சம் ரொக்கம் ரூ.1 கோடி ஆவணங்கள், 50 பவுன் நகைகள் பறிமுதல்.
திருச்சி தொழில் மைய அலுவலகம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.தொழில்முனைவோருக்கு கடன் வழங்க இந்த அலுவலகம் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலானபோலீசார் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்குள்திடீரென்று நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தி, அங்கிருந்த மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொது மேலாளர் ரவீந்திரன் அறையில் ரூ.3 லட்சம் இருந்துள்ளது. இது பற்றி விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அந்த பணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. இதனையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தொழில் மைய அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
அதன்பின்னர் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது. பின்னர் போலீசார் பொதுமேலாளர் ரவீந்திரன் மற்றும் பொறியாளர் கம்பன் ஆகியோரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து திருச்சி உறையூரில் உள்ள பொதுமேலாளர் ரவீந்திரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம், 50 பவுன் நகைகள், ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள், மற்றும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் திருவெறும்பூரில் உள்ள பொறியாளர் கம்பன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.