அரசியலில் புனிதராக இருந்தால் வாயில் …… பொன்மலைப் பகுதியில் நடந்த ஓராண்டு சாதனை கூட்டத்தில் கே.என்.நேரு அதிரடி பேச்சு
அரசியலில் புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெயை தடவி திண்ணையில் படுக்க வைத்து விடுவீர்கள் …
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொன்மலை பகுதி கழகம் சார்பில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொன்மலைபகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், நூறாண்டில் செய்யவேண்டிய சாதனைகளை ஓராண்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து முடித்திருக்கிறார்.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள் எனக் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது:
தமிழக முதலமைச்சர் தாய் உள்ளத்துடன் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கடந்த ஆட்சியின் போது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பொன்மலையில் பகுதி ரயில்வேயில் ஆள் அடுத்த போது அதை எதிர்த்து போராடினோம்.
இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலையை உருவாக்கி உள்ளார் என குறிப்பிட்டார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.
என். நேரு கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
திருவெறும்பூரில் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் பேசும்போது, நேரு ஒரு ஆண்டில் ரூ. 100 கோடி சம்பாதித்து விட்டார். கல்லூரி கடனை அடைத்து விட்டார்.
புதுக்கோட்டை சாலையில் 200 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கின்றார்.
இதைச் சொல்வதற்காக என் மீது வழக்கு போடட்டும். வழக்கை சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
நான் 100 கோடி சொத்து சேர்த்திருந்தால் அதை அரசாங்கமே எடுத்துக் கொள்ளட்டும். இதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொண்டு பேசுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களை சந்தித்த இயக்கம் திமுக.
உங்கள் ஆட்சியில் 19 வழக்குகள் என் மீது போடப்பட்டன.அதில் 9 வழக்குகள் கொலை வழக்குகள். அதை எல்லாம் சந்தித்து தான் இன்று மந்திரியாக வந்திருக்கின்றோம்.
இது திருவெறும்பூர் பகுதிகளில் நடைபெறும் கூட்டம் என்பதால் விளக்கம் அளிக்கிறேன். இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார்.நேரு ஒன்றும் மனிதப் புனிதர் அல்ல என்று.
புனிதராக இருந்தால் வாயில் வெண்ணையை தடவி திண்ணையில் போட்டு விடுவீர்கள்.
நாங்கள் சங்கர மடமா? நடத்துகிறோம். இது அரசியல். இன்றைக்கு அரசியலில் யார் தான் புனிதராக இருக்கிறார்கள்.
அல்லித்துறைக்கு சாலை போட இருப்பதாகச் சொன்னால் அங்கு நேருவுக்கு நிலம் இருக்கிறது என்கிறார்.
அவரது பேச்சு இந்தியா முழுவதும் நீண்டு இருக்கிறது.
நேரு மகன் மீது வழக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அந்த வழக்கில் கீழ் கோர்ட், மேல் கோட்டு,சுப்ரீம் கோர்ட்டு வரை விடுதலை கிடைத்திருக்கிறது.
நான் தவறு செய்தால் தண்டிப்பதற்கு கோர்ட்டு இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
சத்தியமாக சொல்கிறேன் மக்களுக்கு 100% நேர்மையாக பணியாற்றவே வந்திருக்கிறோம். எந்த தவறும் செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குண்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக திரண்டு இருந்தனர் ஆனால் கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.