Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வணிகர்கள் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும். விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

0

'- Advertisement -

 

திருச்சியில் வணிகர்கள் மாநாடு. திருப்புமுனை ஏற்படுத்தும். திருச்சி விடியல் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு ‘தமிழக வணிகர் விடியல் மாநாடு’ திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் நேற்று நடந்தது. காலை 8.30 மணிக்கு பேரமைப்பு கொடியேற்றுதலுடன் இந்த மாநாடு தொடங்கியது. கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். காலை 10 மணிக்கு குத்து விளக்கேற்றி விழா நிகழ்ச்சி தொடங்கியது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கி பேசினார். மாநில பொது செயலாளர் வீ.கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டில் தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சி.ஏ.ஐ.டி.) தேசியத்தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர்.

அதைத்தொடர்ந்து மதியம் 12.35 மணிக்கு வணிகர் விடியல் மாநாட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முதுபெரும் வணிகர்களுக்கு வ.உ.சி.வணிகச்செம்மல் விருதுகள் வழங்கினார். மேலும் நலிந்த வணிகர்களின் வாரசுகளுக்கு க.மோகன் நினைவக கல்வி ஊக்கத்தொகையாக 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும், விபத்தில் கால் ஊனம் அடைந்த தென்காசி பழனிக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ப மஞ்சப்பைகளை வியாபாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

எனது தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட நேரத்தில் கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வந்தது. தமிழ்நாட்டில் அரசு தரப்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அப்போது வணிகர்கள் ஒன்று திரண்டு நிதிகளை வழங்கினர். கொரோனா காலத்தில் ஊரடங்கால் கடைகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த நிலையிலும் நிவாரண நிதி வழங்கிய உங்களை மனதார வாழ்த்துகிறேன். மாநாட்டிற்கு நான் ஒத்துக்கொண்டு வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் உங்களுக்கு நன்றி சொல்ல இந்த மாநாட்டை பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். இந்த தாராள மனப்பான்மை உங்களுக்கு தொடர வேண்டும்.
இலங்கையில் இருக்கிற தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் அரசு சார்பில் உதவி செய்வதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அந்த பணியை தொடங்கி உள்ளோம். கொரோனா ஆரம்ப காலத்தில் தி.மு.க. ஆளுங்கட்சி அல்ல. எதிர்க்கட்சி. ஆனால், ஆளுங்கட்சி என்னென்ன பணிகளெல்லாம் செய்ய வேண்டுமோ, அந்த பணிகளை எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் செய்தோம் என்பது நாட்டிற்கு நன்றாக தெரியும். ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் மக்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் ஆன அத்தனையும் செய்திருக்கிறோம் என்பது வரலாறு.

திருச்சி என்றால், தீரர்கள் கோட்டம் என்று தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார். தி.மு.க. சார்பில் பல்வேறு மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சி என்றால் தி.மு.க.வுக்கு ஒரு திருப்புமுனை. அதுமாதிரி திருச்சியில் இன்று வணிகர்கள் நடத்துகிற மாநாடு ஒரு திருப்புமுனையை உருவாக்கக்கூடிய வகையில் நடைபெற்றுள்ளது. 1982-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நுழைவு வரி என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்து உடனடியாக நடைமுறைப்படுத்தியது. அதை எதிர்த்து முதன் முதலில் சேலத்தில் வணிகர்களை ஒன்று திரட்டி நுழைவுவரியை அமல்படுத்தக்கூடாது என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வணிகர்களுடைய போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் மிகப்பெரிய எதிர்ப்பு ஊர்வலமும் நடத்தி காட்டப்பட்டிருக்கிறது. சென்னை சாந்தோமில் நடந்த போராட்டத்தின்போது, காவல்துறையினரால் வணிகர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிற வகையில் ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்ட நாள்தான் மே 5-ந் தேதி. அப்படி சிறைவைக்கப்பட்ட நாளை வணிகர் தினமாக இங்கே நீங்கள் கொண்டாடி கொண்டிருக்கிறீர்கள்.

இப்போது நடப்பது தி.மு.க. ஆட்சி. மன்னிக்கவும்… நம்ம ஆட்சி. எனவே, மே 5 ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக இந்த மாநாட்டு மூலம் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறோம். தி.மு.க.ஆட்சியானது வணிகர்களின் நலனை பேணக்கூடிய ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. அப்படித்தான் இனியும் இருக்கும். வணிகவரி துறை என்று ஒரு துறையே செயல்பட்டு கொண்டுள்ளது. வணிகவரி துறையானது அரசுக்கு வருவாயினை 4-ல் 3 பங்கை ஈட்டித்தரக்கூடிய முக்கிய துறையகா விளங்கி கொண்டிருக்கிறது.
வணிகர்களின் நலன் காக்கப்பட்டால்தான், அரசுக்கு வரக்கூடிய வருவாயின் நலனும் காக்கப்படும் என்பதை நான் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆட்சி பொறுப்பேற்று அனைத்து காலக்கட்டத்திலும் வணிகர்களின் நலனை காப்பது என மிகவும் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் யாரும் மறக்க மாட்டீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில், வணிகர் நலனை காப்பதற்காக வணிகர்நல வாரியம் சீரமைக்கப்பட்டு, அதனால் வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்ற உடனே, புதிய நலத்திட்ட உதவிகள் வணிக நல வாரியத்தால் வணிக பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு வணிகர்நல வாரியத்தை 1989-ம் ஆண்டு உருவாக்கியவரே நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். கழக ஆட்சியில்தான் அந்த வாரியமே உருவாக்கப்பட்டது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டு வணிகர்நல வாரியத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடும்பநல உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பெண் உறுப்பினர்களுக்கு கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் வாரிசுகளின் கல்லூரி படிப்புக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. நலிவுற்ற வியாபாரிகளுக்கு கூட்டுறவு தொழிற்கூடங்களில் தயார் செய்யக்கூடிய பெட்டிக்கடை, 3 சக்கர வண்டி வாங்க ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
வணிகர்நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 84,101 ஆகும். இந்த வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் 31.3.22 வரை, ரூ.3 கோடிக்கு 8,875 உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளனர். வாரியத்தில் இணையவழி மூலமாகவே உறுப்பினர்கள் பதிவு செய்யும் வசதியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியால், 10.6.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. சரக்குகள் மற்றும் சேவைவரி சட்டத்தில் பதிவு பெறாத ரூ.40 லட்சத்திற்குட்பட்ட சிறு வணிகர்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவும், அதற்கான கட்டணத்தொகை ரூ.500 செலுத்துவதில் இருந்து 15.7.21 முதல் 14.10-21 வரையிலான 3 மாதகாலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இச்சலுகையை 31.3.22 வரை கால நீட்டிப்பு செய்து நான் உத்தரவிட்டேன். இச்சிறப்பு சலுகை காரணமாக 39 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக வணிகர்நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்து பேசி, அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்ற நடைமுறையை முதன் முதலில் கொண்டு வந்தது யாரென்றால், தலைவர் கருணாநிதிதான். அதைப்பின்பற்றிதான், சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுதான் இன்றைய தி.மு.க.ஆட்சி. அந்த ஆட்சியின் முதல் அமைச்சராக இருக்ககூடிய நான் தான் இன்று உங்கள் முன்னால் மாநாட்டில் நின்று கொண்டிருக்கிறேன்.
ஜி.எஸ்.டி.சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், தாங்கள் எதிர்க்கொள்ளக்கூடிய சில சிரமங்கள் குறித்து வணிகர்கள் அப்போது எடுத்துரைத்தனர். உள்நாட்டுவணிகர்கள் வரி செலுத்தும் பிரச்சினை குறித்து சிரமங்கள் அவ்வப்போது பெறப்பட்டு ஜி.எஸ்.டி.மாமன்றத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி.இணையவழி சேவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிற கார ணத்தால், தமிழிலும் அது பெறப்பட வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். தி.மு.க.அரசு அதை ஏற்று ஜி.எஸ்.டி.சேவைகள் தமிழிலும் வழங்கப்படலாம் என நாம் கடிதம் எழுதி இருக்கிறோம். விரைவில் ஜி.எஸ்.டி.சேவைகள் தமிழிலும் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கோரிக்கையை தொடர்ந்து தி.மு.க. அரசு வலியுறுத்தும், வற்புறுத்தும்.
தமிழ்நாடு மதிப்புகூட்டு வரி சட்டத்தின்கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.3.22 வரை நீட்டிக்கப்பட்டது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் வரி கைவிடுதல் ஆய்வுக்குழு தொடங்கப்பட்டு 3 கூட்டங்கள் நடத்தப்பட்டு 66 வரி கைவிடுதல் முன்மொழிதல் பரிசீலிக்கப்பட்டு 65 இடங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிகவரி ஆணையர் தலைமையில் மாநில அளவில் வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழு, மற்ற அந்தந்த மாவட்ட அளவில் வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழுவும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வணிக நட்புறவான சமாதான திட்டம் 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை அமலுக்கு வந்த பின்னர், இத்தகையை வரி சலுகைகளை மாநில அரசு அளிக்க முடியாது நிலை ஏற்பட்டபோதிலும், வரி விதிப்பு முறையில் வணிகர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை வரும்போதெல்லாம் ஜி.எஸ்.டி. மன்றத்தில் எதிர்த்தோம். மாற்றி அமைத்தோம்.

வணிகர்களின் நலன் காப்பதில் தி.மு.க. அரசு என்றைக்கும் முன்னணியில் இருந்து வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமல்ல, வணிகர்களுக்கு எவ்வித தொல்லையும் இருக்க கூடாது. இந்த மாநாட்டுக்கு வருவதற்கு முன்பு டி.ஜி.பி.யுடன் ஆலோசனை செய்தேன். அதன் விளைவாக, சில வாரங்களுக்கு முன்பு நான் அறிமுகம் செய்து வைத்த ‘காவல் உதவி செயலியில்’ வணிகர்கள் உதவி என்ற புதிய பகுதியும் அதில் சேர்க்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்து கொள்கிறேன். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், செயலில் சேர்க்கப்பட்ட இந்த புதிய பகுதியில் காவல்துறையின் உதவியை நீங்கள் கோரலாம். உடனடியாக ரோந்து வாகன போலீசார் விரைந்து வந்து தகராறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள். வணிகர்களை பாதுகாக்கிற இந்த வசதி இன்னும் ஓரிரு வாரத்தில் துவங்க போகிறது.

வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த உங்களில் இருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறேன். இதனால், வாரியத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டபட்டு அனைத்து வித திட்டப்பணிகளும் முடுக்கி விடப்படும். வணிகர்நல வாரியம் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர் இறப்புக்கான குடும்ப நல இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்தில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள் மற்றும் வணிக கடைகளில் நிலவி வரும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கொள்கை வழிமுறைகளை வகுக்க நகராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக உரிமை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் பிதுப்பிப்பதற்கான திருத்தம் கொண்டு வரப்படும். உடற்பயிற்சி கூடங்களுக்கு இனிமேல் காவல்துறையின் உரிமம் தேவையில்லை.

பாலங்களோ அல்லது மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிற வேளையில் அதனால் பாதிக்கப்பட்டு கடைகள் இழக்கக்கூடிய வணிகர்களுக்கு அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு மூலமாக வாடகை கடைகளை வழங்குவதில் நிச்சயமாக முன்னுரிமை அளிக்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி அரசாங்கம். சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் வளர்ச்சியை எட்ட நினைக்கக்கூடிய அரசு இது.
பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே நாங்கள் பொருளாதார வளர்ச்சியாக நாங்கள் நினைக்க வில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் வளரணும். அதுதான் பொருளாதார வளர்ச்சி. அப்படிதான் நாங்கள் கருதுகிறோம். மிகப்பெரிய தொழில் அதிபர் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. உங்களைபோன்ற சிறு வணிகர்களும் வளர வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஒன்றின் வளர்ச்சியில் மற்றதற்கும் பங்குண்டு என வணிகர்கள் தொழில் முனைப்போடு ஈடுபட வேண்டும். தொழில் வளர்ச்சியடையும் அதே வேளையில் வணிகர்களின் நலனும் நிச்சயமாக பாதுகாக்கப்படும். அந்த அளவுக்கு உற்பத்தியில் சிறந்த மாநிலமாக தமிழக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. வணிகர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களோடு பழகக்கூடியவர்கள். நேரடி தொடர்பில் உள்ளவர்கள்.

தமிழக அரசின் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் தூதுவர்களாக வணிகர்கள் இருக்க வேண்டும். மக்களின் எண்ணங்களை, எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக சொல்லலாம். அதை கேட்டு செயல்படுத்தி தர நாங்கள் காத்திருக்கிறோம். தயாராக இருக்கிறோம். நல்ல யோசனைகள் எந்த பக்கம் இருந்து வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய திறந்த மனதோடு இருக்கக்கூடியவன் தான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்.

அதே வேளையில் திட்டமிட்டு பரப்புகிற அவதூறுகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில் பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்த்தையான , ‘வாழ்க வசைவாளர்கள்’ என்பதுதான்.
வணிகர்களின் கோரிக்கைகள் பல தந்திருக்கிறீர்கள். வருகிற 10-ந் தேதிவரை சட்டமன்ற கூட்டம் நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை இங்கே அறிவித்து விட்டேன்.
இன்னும் எனது மனது நிறைவடையவில்லை. அத்தனை கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன் என சொல்லுகின்ற போதுதான் எனது மனது நிறைவடையும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அரசியலுக்காக மேடையில் பேசுவதாக நினைக்க வேண்டாம். திரும்ப திரும்ப சொல்லுகிறேன். சொன்னதை செய்வோம். கருணாநிதி சொன்னதுபோல, அவர் வழியில் நானும் சொல்வது, செய்வதை சொல்வோம் என்பதுதான் எங்கள் ஆட்சி. சட்டமன்ற கூட்டம் தொடர் முடிந்த பின்னர், உங்கள் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 38 – வது வணகர்தின மாநில மாநாட்டை சென்னையில் சிறப்பாக நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வணிகர் சங்க நிர்வாகிகள், பேரமைப்பின், மாநில, மண்டல, மாவட்ட, நகர, கிராம வணிகர் சங்க நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.