சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 11,500 வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு.
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி கோர்ட்டில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் 11,500 வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று திருச்சி கோர்ட்டில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு தொடங்கி வைத்தார்.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வரவேற்றார். 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல், சிறப்பு மாவட்ட நீதிபதி கருணாநிதி, குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி விவேகானந்தன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திக் ஆசாத் நன்றி கூறினார்.
திருச்சி, முசிறி, துறையூர், லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய கோர்ட்டுகளில் தலா 2 அமர்வுகளாகவும் ஆக மொத்தம் 15 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடந்தது. இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் காசோலை மோசடி, ஜீவனாம்ச வழக்கு,நஷ்ட ஈடு வழக்கு, நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட சுமார் 11,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று பிற்பகல் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய இழப்பீடுகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.