38 அணிகள் கலந்து கொள்ளும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் ராஜ்கோட், கட்டாக், சென்னை, ஆமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, அரியானா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய 9 இடங்களில் வருகிற 17-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை நடக்கிறது.
கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் மார்ச் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் மே 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அனுப்பியது.
இதன்படி லீக் சுற்றில் பங்கேற்கும் அணிகள் தங்களது போட்டி நடைபெறும் இடத்துக்கு இன்று சென்றடைய வேண்டும்.
எல்லா அணியினரும் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 20 வீரர்கள் உள்பட 30 பேர் இடம் பெறலாம்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சவுராஷ்டிரா அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா இடம் பிடித்துள்ளார்.
இதே போல் ரஞ்சி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய மூத்த வீரர் அஜிங்யா ரஹானே இடம் பெற்றுள்ளார். பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் ஷிவம் துபே, ஜெய்ஸ்வால், தவால் குர்கர்னி, அர்ஜூன் தெண்டுல்கர் உள்ளிட்டோரும் தேர்வாகியுள்ளனர்.
சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் திணறும் ரஹானே, புஜாரா ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவிகரமாக இருக்கும். எனவே அவர்கள் அதில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று இருவரும் ரஞ்சி போட்டியில் களம் காணுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான ரஞ்சி தொடரில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா அணி ‘எலைட் டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் 41 முறை சாம்பியன் மும்பை, ஒடிசா, கோவா ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவினருக்கான லீக் சுற்று ஆமதாபாத்தில் அரங்கேறுகிறது.