பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
.இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பொறுப்பு கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கேப்டன் ரோகித் சர்மா (5 ரன்கள்), ரிஷப் பண்ட் (18 ரன்கள்), விரட் கோலி (18 ரன்கள்) ஆகிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஏமாற்றினாலும் கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால்,இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46- ஓவர்கள் தாக்குப்படித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
9 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தோல்வியினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.