Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

0

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த 11 மருத்துவ கல்லூரிகளுக்கான திறப்பு விழா, விருதுநகரில் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 12-ந்தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் செல்கிறார்.

விருதுநகரில் நடைபெறும் மருத்துவ கல்லூரி விழாவில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார்.

மதுரையில் அவர் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் “மோடி பொங்கல் விழாவில்” கலந்து கொள்கிறார். இந்த விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது.

பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் மண்டேலா நகர் வருகிறார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு தமிழர் பராம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து பொங்கல் விழாவில் 10 ஆயிரத்து 8 குடும்பங்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 18 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.