Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

.இன்று பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

0

 

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றி மறக்காத அருங்குணம் கொண்டவர்கள். அது மனிதர்கள் என்றாலும் சரி, கால்நடையாக இருந்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, நன்றி தெரிவிக்கும் ஒப்பற்ற உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை.

எல்லாத்தொழிலுக்கும் மேலான தொழில் வேளாண்மைத்தொழில். இந்த தொழிலை செய்யும் விவசாயி தன் உழைப்பின் மூலம், தான் சிந்தும் வியர்வை மூலம், சேற்றில் கால் பதிப்பதன் மூலம் உலகுக்கே உணவளிக்கிறான். அவனுக்கு துணையாக நிற்பது சூரியனும், கால்நடைகளும் என்றால் மிகையாகாது.

அந்தவகையில் தான் நிலத்தை உழுது, நாற்று நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு கண்ணுங்கருத்துமாக பராமரித்து, செங்கதிர் விளைந்தவுடன் அதை அறுவடை செய்கிறான். இயற்கை அவனுக்கு துணைக்கரம் நீட்டினால்தான் நல்ல மகசூலை காணமுடியும். அந்த மகசூலினால் மனம் மகிழும் விவசாயிகள் மட்டுமல்லாமல், அவன் விளைவித்த நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு மகிழ்ந்த தமிழ்க்குலம் முழுவதுமே களிப்புடன் கொண்டாடும்நாள் பொங்கல்.

இந்த பண்டிகையை கொண்டாட சாதி, மதம் தடையில்லை. ஏனெனில், இது தமிழ் இனத்தின் திருநாள். தமிழராய் பிறந்த அனைவருக்குமே உரித்தான பண்டிகை. பொங்கல் திருநாள் 3 நாட்கள் மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முதுமொழிக்கேற்ப, அடுத்தநாள் புத்தாடை அணியப்போகும் முன்பு, வீட்டில் உள்ள பயனற்ற பழைய பொருட்களை கழித்த நாள்தான் போகி பண்டிகை. 2-ம் நாளான இன்றுதான் பொங்கல் பண்டிகை.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகாலையில் தங்கள் வீட்டின் முன்பு 3 கற்களால் அடுப்பு அமைத்து, புது நெல்லை கொண்டு ஆக்கிய புத்தரிசியை புது பானையில் இட்டு, வெல்லம் சங்கமிக்க, பொங்கல் பொங்கிவர, புத்தாடை அணிந்து சுற்றி நிற்கும் குடும்பத்தினரும், சுற்றத்தினரும் பொங்கலோ… பொங்கல்… என்று குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பு தித்திக்கும் கரும்பு. சர்க்கரை பொங்கல் இனிப்பு, கரும்பு இனிப்பு என்று அந்த ஆண்டு முழுவதும் இனிப்பாகவே கழியும் என்பதை கட்டியம் கூறும் நாள்தான் பொங்கல்.

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.