ஜம்முகாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய பனிப்பொழிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் நாள் முழுவதும் தொடர்ந்தது.
சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டன.
பனிப்பொழிவு காரணமாக விமான நிலையத்தில் 600 மீட்டருக்கும் குறைவான அளவே பார்க்கும் நிலை இருந்ததாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். பயணிகள் தங்கள் விமானங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது விமான நிறுவனங்களால் இலவசமாக செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்தால் முழு பணத்தையும் திரும்பப் பெற உரிமை உண்டு, என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் இன்று காலை விமான ஓடுபாதையில் உறைந்து கிடக்கும் பனியை எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
காலையில் வானிலை தெளிவாக உள்ளதாகவும் மெல்லிய உறைபனி அடுக்கு உருவாகியுள்ளதால் அதில் விமானம் சறுக்கிவிடாமல் இருக்க அவை அகற்றப்படுவதாக ஸ்ரீநகர் விமான நிலையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் புதிய பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.