கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாக அதிகரித்து வருவதால் , மாநிலங்கள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மத்திய பிரதேம் இரவு நேர ஊரடங்கை அறிவித்தது.
அதேபோல், உத்தரப்பிரதேசம், பீஹார் மாநிலங்களும் ஊரடங்கை அறிவித்தன. டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் தற்போது, கேரள மாநிலத்திலும் ஒமைக்ரான் பரவலால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் நடவடிக்கையாக டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் டெல்லி, மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது.
இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.