கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை இலக்காக கொண்டு அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருகிறது.

இதை நாங்கள் எதிர்க்கிறோம். சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் வெள்ள பாதிப்புகள், கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம், பிட்காயின் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார் உள்பட அரசின் தோல்விகள் குறித்து நாங்கள் பிரச்சினை கிளப்புவோம்.
கர்நாடக அரசு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சில மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உணவு பழக்கம் அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். முட்டை சாப்பிடுபவர்களுக்கு அதை வழங்க வேண்டும். சாப்பிடாதவர்களுக்கு முட்டை வழங்க வேண்டாம்.
இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.